June 14, 2024

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத் திருவிழா- ஞானம் அறக்கட்டளையின் பேருதவி!


கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நேற்று நடைபெற்ற நிலையில், அங்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்காக லைக்கா ஞானம் அறக்கட்டளை தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தது.

கொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தின் 190 ஆவது வருடாந்த திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், பிரதான திருப்பலி ஆராதனைகள் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகை தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றிருந்தது.

இந்த நிலையில், புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டின் தூர பிரதேசங்களில் இருந்து கொச்சிக்கடைக்கு வருகை தந்திருந்த பக்தர்களுக்கான தங்குமிட வசதிகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.

மேலும், திருவிழாவைககு் காண வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஞானம் அறக்கட்டளையினால் பகல் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

லைக்கா ஞானம் அறக்கட்டளையானது கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பல்வேறு நிவாரணங்களையும் வழங்கியிருந்தது.

இவ்வாறு நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மக்களுக்காக உதவிக் கரம் நீட்டிவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரினால், கடந்த 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.