காலி மாவட்டத்தில் லைக்கா ஞானம் அறக்கட்டளையால் நிவாரணப் பொருட்கள் வழங்கி வைப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிக்கரம் நீட்டிவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளை, காலி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றத்தில் சிக்குண்டு நாட்டின் பல பாகங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை தொடர்ச்சியாக வழங்கி வருகின்றது.

அந்தவகையில் காலி மாவட்டத்தின் வெலிவிட்டிய மற்றும் திவிதுர பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான பல்வேறு நிவாரண உதவிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை வழங்கியது. பிரதேச செயலகம் மற்றும் இலங்கை கடற்படையின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

விசேடமாக அப்பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை ஞானம் அறக்கட்டளை வழங்கி வைத்தது.

இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான நிவாரணப் பணிகளை லைக்கா ஞானம் அறக்கட்டளை வழங்கி வருகிறது. நாடளாவிய ரீதியாக இந்தப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, சர்வதேச அளவிலும் தனது மனிதாபிமானச் செயற்பாடுகளை விஸ்தரித்து, பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உதவிக் கரம் நீட்டி வருகின்றமை விசேட அம்சமாகும்.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது, லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

Facebook
Twitter
LinkedIn
Telegram