இலங்கையில், கால்பந்தாட்டத்தினை முன்னேற்றும் செயற்திட்டத்தில் கைகோர்க்கிறது லைக்கா ஞானம் அறக்கட்டளை!

லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது.

இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.

நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான திரு அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இவ்விடயம் தொடர்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஆசியப் பிராந்தியத்தில் காற்பந்துத்துறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொழில்முறை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இணைத்துக்கொண்டு இளம் வீரர்கள் தேசிய அணியை அடைய தெளிவான பாதையை வழங்குவதை குறித்த செயற்றிட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் 55 நகரங்களில் இருந்து 19 வயதிற்குட்பட்ட 440 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், குறித்த சுற்றுப்போட்டியில் முதற்கட்டத்தில் 11,000 வீரர்கள், 2,500 விளையாட்டுக் கழகங்களின் அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் பங்குபெறவுள்ளனர்.

போட்டியின் இறுதிக் கட்டம் 24 மாவட்ட அணிகளில் முடிவடைவதுடன், சிறந்த அணிகள் தங்கள் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதிக்கிண்ணத்திற்காக மோதவுள்ளன.

குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜீலை மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கவுள்ளதுடன், இதற்கு தேசிய மற்றும் சர்வதேச அனுசரணையாளர்கள் அனுசரணை வழங்குகின்றனர்.

லைக்கா குழுமத்தின் நிறுவனரும்,  தலைவருமான,  திரு அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன்  ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கையின் இளைஞர் யுவதிகளை காற்ப்பந்தாட்டத்துறையில் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் தற்போது கைகோர்த்துள்ளது.

இச்செயற்திட்டத்தின் ஊடாக லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அனைத்து சமூகத்தினருக்கும் காற்பந்து விளையாட்டை நீண்ட காலத்திற்கு ஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது.

லைகா ஞானம் அறக்கட்டளையானது, சுகாதாரம், கல்வி, விவசாயம், இளைஞர் வலுவூட்டல்;, மற்றும் சமூக மேம்பாடு போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் சமூக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்துவதற்கு பிரதான பங்காளராக லைகாவின் ஞானம் அறக்கட்டளை விளங்குவதுடன், ஊடக மற்றும் தனியார் அனுசரணை நிறுவனங்களும் இணைந்து கொண்டுள்ளன” எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது.

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும்.

Facebook
Twitter
LinkedIn
Telegram