April 16, 2024

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.!

லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March) மாதம் 19 ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும் நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது.

தனது சவுக்கு மீடியா You Tube பக்கத்தில், லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின் மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும் இந்த காணொளிகள் மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட YouTube LLC நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர் பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube LLC தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன் சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது.

அத்துடன் YouTube LLC சார்பில் முன்னிலையான, சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன் சம்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, விசாரணையை நீதிபதி சி.வி. கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார்.


More Posts for Show: Hello Athavan