April 27, 2026

இலங்கையின் பெருமை: உலக மேடைகளில் ஒலிக்கும் ‘தீ’யின் குரல் – ‘வாரி வாரி’ ஆல்பம் வெளியீட்டிற்காக கொழும்பு வருகை

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டு, உலகளாவிய இசைத் தளத்தில் தனது தனித்துவமான குரலால் முத்திரை பதித்து வரும் பிரபல பின்னணிப் பாடகி Dhee (தீ), தனது புதிய சுயாதீன இசை ஆல்பமான ‘VARI VARI’ (வாரி வாரி) வெளியீட்டிற்காக கொழும்பு வருகை தந்துள்ளார். மரபார்ந்த வேர்களையும் நவீன இசைப் போக்குகளையும் இணைக்கும் ஒரு கலைப் பாலமாகத் திகழும் அவர், தனது இசைப் பயணம் தொடங்கிய தாய்மண்ணிற்கு மீண்டும் திரும்பியிருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

பண்பாட்டு அடையாளமும் உலகளாவிய வளர்ச்சியும்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புலம்பெயர்ந்த தீ, அங்குள்ள பன்முகத்தன்மை கொண்ட கலைச் சூழலில் தன்னை ஒரு செழுமையான கலைஞராக வார்த்தெடுத்துக் கொண்டார். தமிழர் பண்பாட்டு விழுமியங்களைத் தனது இசையின் ஆன்மாவாகக் கொண்டிருக்கும் அவர், சமகால இசை உலகில் மிகவும் செல்வாக்கு மிக்க குரல்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். குறிப்பாக, உலகளாவிய ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘என்ஜாய் என்ஜாமி’ (Enjoy Enjaami) பாடல், இந்திய சுயாதீன இசையை (Indie Music) அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. பல கோடிப் பார்வைகளைக் கடந்த இப்பாடல், அடையாளங்கள் மற்றும் வேர்களைக் கொண்டாடும் ஒரு பண்பாட்டுக் கீதமாக இன்றும் கொண்டாடப்படுகிறது.

விருதுகளும் கலைப்பயணமும்

தனது அபாரமான கலைத்திறனுக்காக ஃபிலிம் ஃபேர் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்றுள்ள தீ, வெறும் பின்னணிப் பாடகியாக மட்டுமன்றி, ஒரு முன்னோடிப் படைப்பாளியாகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார். ‘I Wear My Roots Like A Medal’ மற்றும் ‘Can’t You Stay A Little Longer’ போன்ற பாடல்கள் மூலம், உணர்வுகளையும் பரிசோதனை முயற்சி இசை வடிவங்களையும் ஒருங்கிணைக்கும் அவரது ஆளுமை வெளிப்பட்டது. எல்லைகளையும் மொழிகளையும் கடந்து இந்தியா மற்றும் உலகளாவிய ரசிகர்களை ஈர்த்துள்ள அவர், புதிய தலைமுறை கலைஞர்களின் ஒரு வலிமையான பிரதிநிதியாகப் பார்க்கப்படுகிறார்.

மீண்டும் வேர்களை நோக்கி…

தற்போது வெளியாகியுள்ள ‘VARI VARI’ அவரது இசைப் பயணத்தின் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. தனது கலை வாழ்வின் தொடக்கப் புள்ளியான இலங்கை மண்ணுடன் மீண்டும் இணையும் இந்தத் தருணம், உணர்வுப்பூர்வமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. இந்த வருகை மற்றும் புதிய ஆல்பம் வெளியீடு ஆகியவை, தீ-யின் இசைப் பரிணாமத்தை உலகிற்கு மீண்டும் ஒருமுறை பறைசாற்றுவதாக அமையும் என்பதில் ஐயமில்லை