August 16, 2026

SGBV – முதலாவது சுதேசிய ஆய்வு அறிக்கை வெளியீடு

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் (SGBV) பாதிக்கப்பட்டவர்களுக்கான சேவைகள் குறித்த முதலாவது சுயாதீனமான, தேசிய அளவிலான ஆய்வு அறிக்கையும் காணொளியும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.  

ஆகஸ்ட் 14 அன்று கொழும்பு Granbell Hotel இல் நடைபெற்ற நிகழ்வில் இவை வெளியிடப்பட்டன.

‘இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளைக் கையாள்வதற்கான சேவைகளின் வரைபடம்’ (Mapping of Services to Address Sexual and Gender-Based Violence (SGBV) in Sri Lanka) என்ற தலைப்பிலான இந்த ஆய்வு, அரசசார்பற்ற நிறுவனத் துறையால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது மற்றும் மிகப்பெரிய ஆய்வாகும்.  

இலங்கையில் SGBV சேவைகளின் பயன்பாடு மற்றும் திறனை வரையறுப்பதுடன், அவற்றை விமர்சன ரீதியாக ஆராய்ந்து, நீதியை வழங்குவதையும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்துவது இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாகும்.

‘விழுது’ (VILUTHU) நிறுவனம் மற்றும் ‘சமத்துவம் மற்றும் நீதிக்கான மையம்’ (CEJ) ஆகியவை இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன. நாட்டின் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 888 பெண்கள் மற்றும் 109 சேவை வழங்குனர்களின் வாக்குமூலங்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு தயார் செய்யப்பட்டுள்ளது.  

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் ஐந்தில் இரண்டு பங்கினர் அதாவது 39.8 சதவீதத்தினர் தங்கள் வாழ்நாளில் துணைவர் ஒருவரால் உடலியல், பாலியல், உணர்வு ரீதியான அல்லது பொருளாதார வன்முறைகளுக்கு அல்லது கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகியுள்ளனர். காற்பங்கிற்கும் அதிகமானோர் தமது 15 வயதிற்குப் பிறகும் உடலியல் அல்லது பாலியல் வன்முறையை எதிர்கொண்டுள்ளனர்.  

வன்முறையை எதிர்கொள்ளும் ஒரு பெண் அதனை தைரியமாக வெளிப்படுத்தி முறைப்பாடு செய்வார் என 30 சதவீதமானோர் மட்டுமே நம்புகின்றனர். சமுதாயத்தில் ஏற்படும் களங்கம், அவமானம், பழிவாங்கப்படுவோம் என்ற பயம் மற்றும் விவாகரத்து குறித்த அச்சம் ஆகியவையே பெண்கள் முறைப்பாடு செய்ய முன்வராததற்கு முக்கிய காரணங்களாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.  

இந்த ஆய்வு வெறும் தரவுச் சேகரிப்பாக அன்றி, பாதிக்கப்பட்ட பெண்களின் உண்மையான அனுபவங்கள் மற்றும் குரல்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என விழுது நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைத்தேயி ராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.  

அரசு மற்றும் அரசுசாரா சேவைத் துறைகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதையும், பொதுமக்கள் தங்கள் உரிமைகளைப் புரிந்துகொள்வதையும் இந்த அறிக்கை நோக்கமாகக் கொண்டுள்ளது.