April 15, 2026

கண்களைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவு முறைகள்

பொதுவாக எமக்கு கண் பார்வை மங்கத் தொடங்கும் வரை நாம் கண்களின் ஆரோக்கியத்தைப் பற்றிப் பெரியளவில் கவலைப்படுவதில்லை. ஆனால், இதயம் மற்றும் மூளைக்கு ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ, அதேபோல் கண்களுக்கும் முறையான சத்துக்கள் அவசியம் என கண் மருத்துவர் முர்ரே ஃபால்க்னர் குறிப்பிடுகிறார். நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவுகள் நமது பார்வையை நீண்ட காலத்திற்குத் தெளிவாக வைத்திருக்க உதவுகின்றன.

உங்கள் கண்ணின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்க சில குறிப்பிட்ட உணவுகள் உதவுகின்றன. அவற்றை இப்படிப் பிரித்துப் பார்க்கலாம்:

1. கூர்மையான பார்வைக்கு (துல்லியமாகப் பார்ப்பதற்கு):

  • உணவுகள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற புளிப்புப் பழங்கள், ஸ்ட்ரோபெர்ரி போன்ற பெர்ரி வகைகள் மற்றும் பாதாம், முந்திரி போன்ற பருப்பு வகைகள்.
  • பலன்: இவை உங்கள் கண் செல்கள் சீக்கிரம் பலவீனமடையாமல் தடுத்து, வயதான காலத்திலும் பார்வை மங்காமல் இருக்க உதவும்.

2. கண்களுக்கு ஒரு ‘இயற்கைக் கண்ணாடி’ போல:

  • உணவுகள்: கீரை வகைகள் (முக்கியமாக பசளிக்கீரை), முட்டையின் மஞ்சள் கரு, கரட் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு.
  • பலன்: வெயிலில் இருந்தும், மொபைல் போன் திரைகளில் இருந்து வரும் பாதிப்பில் இருந்தும் உங்கள் கண்களை இவை உள்ளிருந்தே பாதுகாக்கும்.

3. கண் வறட்சியைத் தடுக்க (கண் எரிச்சலைக் குறைக்க):

  • உணவுகள்: மீன் வகைகள் (சிறிய மீன் மற்றும் நெத்தலி மீன் கூடச் சிறந்தது) மற்றும் ஆளி விதைகள்.
  • பலன்: கண்கள் காய்ந்து போகாமல் ஈரப்பதத்துடன் இருக்க இவை உதவும். கணினி அல்லது மொபைல் அதிகம் பார்ப்பவர்களுக்கு இது மிகவும் அவசியம்.

4. இரவு நேரப் பார்வைக்கு:

  • உணவுகள்: கரட் மற்றும் மஞ்சள் நிறப் பழங்கள் (மாம்பழம், பப்பாளி போன்றவை).
  • பலன்: இவை இருட்டிய பிறகு அல்லது குறைந்த வெளிச்சத்தில் உங்கள் கண்கள் பொருட்களைத் தெளிவாகப் பார்க்கத் துணைபுரியும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

உணவு தவிர, உடலை நீர்ச்சத்துடன் (Hydration) வைத்திருப்பது கண்கள் உலர்ந்து போவதைத் தடுக்கும். அதேபோல், அதிகப்படியான சீனி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது கண்களில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும். வெவ்வேறு நிறங்களைக் கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது வாழ்நாள் முழுவதும் தெளிவான பார்வையைப் பெற வழிவகுக்கும்.

உங்களுக்குப் பார்வையில் ஏதேனும் குறைபாடுகள் தெரிந்தால், சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது சிறந்தது. நாம் உண்ணும் உணவே நமது பார்வைக்கு மருந்தாகும்.