சிங்கப்பூரின் 60வது சுதந்திரத் தினத்தைத் தொடர்ந்து, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடுத்த அத்தியாயத்தை நோக்கிய 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட அறிக்கையை பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் பிப்ரவரி 12 நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில், சிங்கப்பூர் குடும்பங்களுக்கு அதிக ஆதரவும் பாதுகாப்பும் வழங்கும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
குடும்பங்களே நமது சமுதாயத்தின் தூண்கள் எனக் குறிப்பிட்ட பிரதமர், ‘முன்னேறும் சிங்கப்பூர்’ திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் பெரியவர்கள், சிறியவர்கள் மற்றும் உடற்குறையுள்ளோர் என அனைத்துத் தரப்பினருக்கும் உறுதுணையாக இருந்து வருவதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, குடியிருப்புப் பேட்டைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், பொது வீடுகள் சாமானிய மக்களுக்கும் கட்டுப்படியான விலையில் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று அவர் உறுதியளித்தார்.
மேலும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளிக்க சிங்கப்பூரர்களுக்கு உடனடி நிதியுதவிகளையும் பிரதமர் அறிவித்தார். இதன்படி, தகுதிபெற்ற சிங்கப்பூரர்கள் ஒவ்வொருவருக்கும் $200 முதல் $400 வரை வாழ்க்கைச் செலவின சிறப்புத் தொகை ரொக்கமாக வழங்கப்படும்.






